இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் இதர தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையான முடிவுகளை ஞானேஷ் குமார் எடுத்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், தேர்தல் ஆணையத்தின் இதர இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களின் அனுமதி இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு 14 முறைக்கும் மேல் எழுத்துப்பூர்வமாக தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது ஞானேஷ் குமாரால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கைகளால், சுமார் 13 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மென்பொருளில் (Software) தன்னிச்சையான மாற்றங்களைச் செய்ததாகவும், ‘படிவம் 6’-ஐ (Form 6) உரிய அனுமதியின்றி மாற்றியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’-இன் பிரிவு 32-இன் கீழ் தலைமைத் தேர்தல் ஆணையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும். இதர ஆணையர்களின் ஒப்புதலின்றி எடுக்கப்பட்ட அனைத்து தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் மற்றும் மென்பொருள் மாற்றங்களைச் செல்லாததாக அறிவித்து, பழைய ‘படிவம் 6’-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
