தமிழகத்தில் மின்வெட்டு புகார்: மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

தமிழகத்தில் மின்வெட்டு புகார்: மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்தில் முதல்வர் விஜய் நேற்று (செப். 23) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகளும் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களும் தொடர் மின்வெட்டால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, டெங்கு பரவும் சூழலில் மின்சாரம் இல்லாததால் பலர் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே தூங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும், இதனால் கொசுக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் முதல்முறையாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு தொடர்பான அலுவலகங்களில் அவர் ஆய்வு செய்தார். மேலும், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, மாநிலத்தில் தற்போதைய மின் உற்பத்தி மற்றும் மின் தேவையின் நிலவரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். மின்வெட்டு பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்களிடமும் முதல்வர் விஜய் கலந்துரையாடினார். ஆய்வை முடித்துக் கொண்டு அவர் காரில் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் விஜய் ஆய்வை முடித்துச் சென்ற பின்னர், அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியா முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் துணை மின் நிலையங்களின் பற்றாக்குறையும் உள்ளது. பல இடங்களில் கூடுதல் மின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் மின்மாற்றிகள் தீப்பற்றி எரிகின்றன. வரும் காலங்களில் இவை சரிசெய்யப்படும். மின் தேவையைப் பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தி.மு.க. ஆட்சியில் மின்மாற்றிகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. சுமார் 6 ஆயிரம் மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 600 துணை மின் நிலையங்கள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்களை அமைக்கும் பணிகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வு மேற்கொண்டோம். மாநிலத்தின் மின் தேவை குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். தேர்தலுக்காக பராமரிப்புப் பணிகள் தள்ளிப்போடப்பட்டதால் தற்போது பழுதுகள் ஏற்படுகின்றன. மின்தடை தொடர்பாக மக்கள் கோபப்படாமல், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அவகாசம் அளிக்க வேண்டும்.

20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தை முதல்வரிடம் அளித்துள்ளோம். மின்வாரியத்தில் 10 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். மின்வெட்டு பிரச்சினையை சரிசெய்ய 18 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வரவிருக்கும் கோடைகால மின் தேவையை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது காற்றாலை மின் உற்பத்தி குறைவாக உள்ளது. மின் பாதிப்புகளை சரிசெய்ய அதிகாரிகளுக்கு பொதுமக்களும் அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே, தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கு ஐ.டி.ஐ. படித்தவர்களை 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் தமிழக அரசின் அறிவிப்பைக் கண்டித்து, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் பின்புற வாயிலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது: “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 40 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தப் பணியிடங்களை நிரப்பாமல், கள உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பது மின்வாரியத்தின் செயல்பாட்டையும், ஊழியர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

மின்சாரத் துறையில் உயர்பதவிகளை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்புவோம் என கூறும் அரசு, பொதுமக்களை நேரடியாக சந்தித்து களத்தில் பணியாற்றக்கூடிய கள உதவியாளர்களை மட்டும் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.