இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டது அம்பலமானதைத் தொடர்ந்து ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில், 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை, தங்களது ஒப்புதல் இல்லாமல் முடிவுகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், மேலும் ஒரே நாளில் 4 முறை ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம். இது இந்திய அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல். இதனை ஏற்பாடு செய்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் தேர்தல் ஆணையம் தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன. நீதியின் முன் அனைவரும் நிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செயல்பாடுகள் தேசத்துரோகத்திற்கு இணையானவை என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தப்ப முடியாது என்றும் ஏற்கெனவே தான் பேசியிருந்த வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி தனது பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகள் அதன் நடுநிலைத் தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சி இது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ், இரு தேர்தல் ஆணையர்களும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்திருப்பது தீவிரமான விவகாரம் என்று கூறினார். தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை நாடாளுமன்றம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (யுபிடி) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் உண்மையான முகம் தற்போது வெளியே வந்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அந்த மாநிலங்களில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களின் வாக்குக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் மற்றும் முறைகேடான ஒரு சம்பவம். எங்கள் வாழ்நாளில் இதுபோன்ற ஒன்றை நாங்கள் பார்த்ததே இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர் பதவியில் தொடர்வதற்கான எந்த தார்மீக உரிமையும் அவருக்கு இல்லை.
அரசியலமைப்பைத் தகர்க்க முடியாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும். அவர்களால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவில் உள்ளவர்களை வாக்காளர் பதிவு அதிகாரிகளாக நியமிக்க முடியாது. நாங்கள் முன்பு கூறியது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஞானேஷ் குமார் காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பா.ஜ.க.வுடன் இணைந்து, பா.ஜ.க. ஆதரவு மனப்பான்மை கொண்டவர்களைத் தேர்தல் பணியில் அமர்த்தியுள்ளனர். இதுபோன்ற ஒரு முறைகேடு இதுவரை நடந்ததே இல்லை. உங்களுக்கு குறைந்தபட்சம் கண்ணியம் இருந்தால், உங்களைக் கைது செய்யுமாறு நீங்களே கோருவீர்கள். மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பலமுறை ஆட்சேபணை தெரிவித்ததாகவும், அவர்களின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
