மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க. கோட்டைகளை கைப்பற்றி த.வெ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தமிழக மக்களுக்கு முழுமையான அர்ப்பணிப்புடனும் நன்றியுணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று தமிழக முதல்வரும் த.வெ.க. தலைவருமான விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 62,090 வாக்குகள் கிடைத்தன. தற்போது கட்சி மாறி த.வெ.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், இடைத்தேர்தலில் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி 2,709 வாக்குகளை பெற்று நான்காம் இடத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,986 வாக்குகளை பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இதேபோல், பொதுத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 46,438 வாக்குகள் கிடைத்தன.

தற்போது த.வெ.க. சார்பில் போட்டியிட்ட சத்யபாமா, இடைத்தேர்தலில் 66,841 வாக்குகள் பெற்று,  9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), கரூர் (கரூர் மாவட்டம்), விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்), திருச்சி கிழக்கு (திருச்சி மாவட்டம்) ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்தன.

இதில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பொதுவாக, இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியின் செல்வாக்கை மதிப்பிடும் தேர்தலாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், நான்கு மாத கால த.வெ.க. ஆட்சி மக்களைத் திருப்திப்படுத்தியுள்ளதா அல்லது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விகளுக்கு விடை தேடும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்தது.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை ஆட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்றாகக் கருதி, ஆளுங்கட்சியினர் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோன்ற நிலைதான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. இருப்பினும், இந்த வெற்றி ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனெனில், சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை அக்கட்சி இன்னும் எட்டவில்லை.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், த.வெ.க.வுக்கு தற்போது 109 இடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மையை எட்ட அக்கட்சிக்கு மேலும் 9 இடங்கள் தேவைப்படுகின்றன.

தமிழகத்தில் இன்னும் 5 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அனைத்திலும் த.வெ.க. வெற்றி பெற்றாலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 114 ஆக மட்டுமே உயரும். அப்போதும் பெரும்பான்மையை எட்ட மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

இந்த நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், த.வெ.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர வேண்டிய சூழல் நீடிக்கிறது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது, தற்போதைய இடைத்தேர்தலில் த.வெ.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இதற்குக் காரணமாக, முன்பு அ.தி.மு.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாகக் கருதப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டலாம்.

அ.தி.மு.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாகக் கருதப்பட்ட மதுராந்தகம், தாராபுரம் ஆகியவை தற்போது த.வெ.க.வின் வசமாகியுள்ளன. இந்தத் தேர்தலில் தி.மு.க. இரண்டாவது இடத்தையும், அ.தி.மு.க. மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நாம் தமிழர் கட்சி இரு தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்துள்ளது.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வைப்புத்தொகையை இழந்ததுடன், 1,000 வாக்குகளைக் கடப்பதற்கே பல சுற்றுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் இந்தத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.