ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்கு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினர். மக்கள் போராட்டம் எழுச்சியாக மாறியதால் கடந்த மாதம் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.
அவருக்கு பதில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பு ஏற்றார். என்றாலும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார குழப்பத்தை சீர்படுத்த முடியவில்லை. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் 3 நாட்களுக்கு முன்பு கொழும்பில் லட்சக்கணக்கில் திரண்டனர். அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்து மாளிகையை அவர்கள் கைப்பற்றினர். அதைப் போலவே அதிபரின் அலுவலகமும் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மக்கள் ஆக்ரோஷத்துடன் திரண்டு வந்ததால் உயிர் பிழைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை காலி செய்து விட்டு தப்பி ஓடினார். கொழும்பு அருகே அவர் ரகசிய இடத்தில் பலத்த ராணுவ பாதுகாப்புடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றார்.
அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக தெரிகிறது. இந்த தகவல் வெளியானதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பசில் அமெரிக்கா மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். அரசியல் தலைவர்கள் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக உள்ளனர். இதையடுத்து வேறுவழியே இல்லாமல் பசில் ராஜபக்சே வீட்டுக்கே திரும்பினார்.