லுங்கி இங்கிடி, ரபாடாவின் வேகப்பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி பும்ரா, ஷமியின் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
3-வது, மற்றும் 4-வது நாளில் மழை இருக்காது. 5-வது நாள் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால், 2 நாட்களுக்குள் ஆட்டம் முடிந்தால், சிறப்பாக இருக்கும்.
ராகுல், அகர்வால் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளம்தான் இந்திய அணியை 327 ரன்கள் வரை இழுத்து வந்துள்ளது. ராகுல், ரஹானே ஆட்டமிழந்தபின், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நானும் ரன் அடிக்கணுமா எனக் கேட்காத குறையாக, சொதப்பலாக பேட்டிங் செய்தனர்.
பெவிலியனில் ஏதேனும் பரேடு நடந்ததா எனத் தெரியவில்லை. 96-வது ஓவரிலிருந்து ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் விழுந்து இந்திய அணியின் எதிர்பார்ப்பு நொறுங்கியது.
நடுவரிசையில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர், அஸ்வின் ஆகியோர் ஓரளவுக்கு நிலைத்து பேட்டிங் செய்திருந்தாலே ஸ்கோர் 400 ரன்களை எட்டியிருக்கும். கடைசி 6 பேட்ஸ்மேன்களில் பும்ரா மட்டுமே (14) இரட்டை இலக்க ரன் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
ஆடுகளம் நேற்றைய மழையால் குளிர்ந்திருந்ததாலும், காற்றின் ஈரப்பதத்தையும் நன்கு பயன்படுத்திக்கொண்ட தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் பந்தை நன்கு ஸ்விங் செய்தனர். 140 கி.மீ. வேகத்தில் வந்த பவுன்ஸரையும், ஸ்விங்கையும் இதுபோன்ற ஆடுகளத்தில் ஒருசேரச் சந்தித்து அனுபவமில்லாத நடுவரிசை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது.
கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே 81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2-ம் நாளில் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
3-ம் நாளான இன்று ராகுல், ரஹானே ஆட்டத்தைத் தொடங்கினர். ரபாடா வீசிய மார்பு உயர ஷார்ட் பந்தைத் தூக்கி அடிக்க முற்பட்டு ராகுல் 123 ரன்களில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கினார். ரஹானே அரை சதம் அடித்து தன் இருப்பை நிலைநாட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிடியின் ஷார்ட் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 48 ரன்களில் பெவிலியின் திரும்பினார்.
அதன்பின் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றிப் பெரிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை. பெவிலியனில் ஏதேனும் அவசரமான வேலை இருப்பது போன்று வருவதும் போவதுமாக ஆட்டமிழந்து சென்றனர். ரிஷப் பந்த் (8), அஸ்வின் (4), தாக்கூர் (4), ஷமி (8), பும்ரா (14) என ஆட்டமிழந்தனர்.
105.3 ஓவர்களில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இங்கிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. எல்கர், மார்க்ரம் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் எல்கர் லெக் திசையில் சென்ற பந்தை அடிக்க முற்பட்டு 2 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த பீட்டர்ஸன், மார்க்ரமுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 8-வது ஓவரில் பந்தை சரியாகக் கணிக்காமல் ஆடிய பீட்டர்ஸன் 15 ரன்னில் இன்சைட் எட்ஜில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டூசென், மார்க்ரமுடன் இணைந்தார்.
தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடியுடன் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஆடினர். தென் ஆப்பிரிக்க அணிக்கு இணையான வேகப்பந்துவீச்சை வைத்துள்ள இந்திய அணி வீரர்களும் லைன் லென்த்தில் வீசி நெருக்கடி அளித்தனர்.
11-வது ஓவரில் ஷமி வீசிய அற்புதமான பந்தில் மார்க்ரம் க்ளீன் போல்டாகி 13 ரன்னில் பெவிலியன் சென்றார். அவுட்சைட் எட்ஜ் எடுத்துவிடுமோ என பேட்டால் மார்க்ரம் தொடத் தயங்கிய வினாடியில் ஸ்டெம்பைப் பதம் பார்த்தது ஷமியின் பந்து.
முகமது சிராஜும் தன் பங்கிற்கு விக்கெட்டைச் சாய்த்தார். தனது அவுட் ஸ்விங் பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டிய சிராஜ், டூசென் (3) விக்கெட்டை வீழ்த்தினார். 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறி வருகிறது. பவுமா, டீகாக் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் உள்ளனர்.