வேகமான மற்றும் துல்லியமான ஆஃப்சைடு முடிவுகளை பெறும் வகையில் கத்தார் உலகக் கோப்பையில் ‘அரை தானியங்கி ஆஃப்சைடு’ தொழில்நுட்பம் (semi-automated offside Technology) பயன்படுத்தப்பட உள்ளது. இதை சுருக்கமாக எஸ்ஏஓடி என அழைக்கின்றனர். எஸ்ஏஓடி-யின் கீழ் 12 டிராக்கிங் கேமராக்கள் ஆடுகளத்தின் கூரைகளில் பொருத்தப்படும். மேலும் போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பந்தும் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பந்தின் மையப்பகுதியில் ஐஎம்யு (Inertial measurement unit) என்ற சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இரு அம்சங்களும் வீரர்கள் உடம்பில் 29 இடங்களை தரவுப் புள்ளிகளாக சேகரிக்கும். ஐஎம்யு சென்சார் பந்து உதைக்கப்படும் புள்ளி, இடம், திசை ஆகியவற்றின் தரவுகளை நொடிக்கு 500 முறை வீடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரி அறைக்கு அனுப்பும். வீட்டில் உள்ள ரசிகர்களும், மைதானத்தில் உள்ள பார்வையாளர்களும் நடுவரின் முடிவைப் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்டேடியம் திரைகளில் 3டி படங்களுடன் ஆஃப் சைடு காட்சிகள் காண்பிக்கப்படும்.
உலகக் கோப்பையை நடத்தும் சிறிய நாடு: கத்தார் நாட்டின் மொத்த பரப்பளவு 11,500 சதுர கிலோ மீட்டர். இந்நாட்டின் மக்கள் தொகை 29 லட்சம். இந்த வகையில் பிஃபா உலகக் கோப்பையை நடத்தும் சிறிய நாடு என்ற பெருமையை கத்தார் பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளையொட்டி கத்தாரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலக பணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.
மைதானம் முழுவதும் குளிர்சாதன வசதி: முந்தைய உலகக் கோப்பை போன்று இல்லாமல் கத்தார் உலகக் கோப்பை நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது. வழக்கமாக ஜூன், ஜூலையில் தான் உலகக் கோப்பை தொடரை பிஃபா நடத்தும். ஆனால் இந்த மாதங்களில் கத்தாரில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். இதை கருத்தில் கொண்டு குளிர்காலத்தில் போட்டி நடத்தப்படுகிறது. தற்போது அங்கு 14 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. மைதானம் முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண் நடுவர்கள்: கத்தார் உலகக் கோப்பையில் பிரான்சின் ஸ்டெபானி ஃப்ராபார்ட், ஜப்பானின் யோஷிமி யமாஷிதா, ருவாண்டாவின் சலிமா முகன்சங்கா ஆகிய 3 பெண் நடுவர்கள் பணியாற்ற உள்ளனர். ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெண் நடுவர்கள் பணியாற்ற உள்ளது வரலாற்றில் இதுவே முதன்முறை. இதுதவிர உதவி நடுவர்கள் குழுவிலும் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.