சென்னையில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை தண்ணீர் தேங்கிய இடங்களில் 24 மணி நேரமும் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்.29-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட சென்னை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வட சென்னை பகுதிகளில் தினசரி 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக கொளத்தூர், வில்லிவாக்கம், பட்டாளம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை மோட்டார் பம்புகள் கொண்டு அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மழை பெய்த ஒரு சில மணி நேரங்களில் தேங்கிய தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை தண்ணீர் தேங்கிய இடங்களில் 24 மணி நேரமும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளாதாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தலின் முக்கிய அம்சங்கள் :
- தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கும்.
- வடகிழக்கு பருவமழை முடியும் வரை தண்ணீர் தேங்கிய இடங்களில் 24 மணி நேரமும் மோட்டார் பம்புகள் இருக்கும்.
- மழை தொடங்கி சிறிய அளவில் தண்ணீர் தேங்க தொடங்கிய உடன் மோட்டார் பம்புகளின் இயக்கதை தொடங்கி விட வேண்டும்.
- மழை நின்ற பிறகு அந்த இடத்தில் முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்புதான் மோட்டார்களின் இயக்கத்தை நிறுத்த வேண்டும்.
- ஒவ்வொரு மழையின்போது இதை முறையாக பின்பற்ற வேண்டும்.
- மழை பெய்து அதிக அளவு தண்ணீர் தேங்கிய பிறகு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கமால் தண்ணீர் தேங்க தொடங்கிய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் தற்போது வரை மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 மோட்டார் பம்புகள் தயாராக உள்ளது. தற்போது வரை மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் 168 மோட்டர் பம்புகள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.