பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை அதிபர் மேக்ரான் அதிபர் மாளிகை வாசல் வரை வந்து காத்திருந்து அழைத்துச் சென்றார்.

பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசிய பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அடுத்த கட்டமாக அங்கிருந்து டென்மார்க் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் பிரடெரிக்சனை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ் போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா- நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் பிரதமர்களைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார்.

டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக பிரான்ஸ் சென்றடைந்தார். தலைநகர் பாரிஸ் விமானநிலையத்தில் மோடியை உயரதிகாரிகள் வரவேற்றனர். பாரிஸில் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். இதையடுத்து அதிபர் மாளிகையான எல்ஸிபேலஸ் சென்றார்.

அங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாசல் வரை வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திப்பதில் எப்போதும் போல் மகிழ்ச்சி. இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் நீண்ட நேரம் பேசினோம்’’ என்று தெரிவித்தார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

அதில் ‘‘இரு நாடுகளும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் பொதுமக்களின் பலியை கண்டிக்கின்றன. போரை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், இந்தியாவும் பிரான்ஸும் மோதலின் காரணமாக உக்ரைனில் மோசமான உணவு நெருக்கடியின் அபாயத்தை நிவர்த்தி செய்ய ஒருங்கிணைந்த, பலதரப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளன.’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.