தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மாநில எல்லோயோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், அங்கு உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக பதற்றம் நீடிக்கிறது.

டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று செங்கோட்டை. இந்தப் பகுதிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலா வாசிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது. இந்தச் சூழலில் இன்று (நவ.10) மாலை 6.30 மணி அளவில் அந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘கேட் 1’ நுழைவாயில் பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் அந்தப் பகுதியில் தீயை அணைத்தனர். காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்த முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply