டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு

எஸ்ஐஆர்-க்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள், கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த 12 மாநிலங்களிலும் இதுவரை 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் அவசரகதியில் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் தலைவர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்ததாவது:

“கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் எஸ்ஐஆர் பணிகளை ஒத்திவைக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் எஸ்ஐஆர் நடத்த இது சரியான நேரம் அல்ல என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், தேர்தல் ஆணையம் எதையும் கேட்கவில்லை. பாஜக மற்றும் மோடிக்காக செயல்படுவது தெளிவாகியிருக்கிறது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தில் தவறான முயற்சிகள் குறித்து மாநில கமிட்டிகளுக்கு மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தியும் எச்சரிக்கை விடுத்தனர். எஸ்ஐஆருக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளோம். ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சிகளையும் அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் டிசம்பர் முதல் வாரத்தில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணியை காங்கிரஸ் நடத்தவுள்ளது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.