2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா-8. ஆப்பிரிக்கா-9, வட, மத்திய அமெரிக்கா கரீபியன்-3, தென்அமெரிக்கா-6, ஓசினியா-1, ஐரோப்பா-16.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான பிளே-ஆப்ஸ் மூலமாக 2 அணிகளுமாக, மொத்தம் (43 + 3 + 2) 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் தேர்வாகும்.

இந்த நிலையில், தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் நகரில் நடந்த ஆட்டத்தில் ஜெர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி ‘ஏ’ பிரிவில் 15 புள்ளிகளை பெற்று தகுதி பெற்றது.
4 முறை உலக கோப்பையை கைப்பற்றிய அந்த அணி தொடர்ந்து 19-ஆவது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. ஒட்டுமொத்தத்தில் 21-ஆவது தடவையாக தகுதி பெற்றுள்ளது. சுலோ வாக்கியா 12 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.
ஐரோப்பிய தகுதி சுற்று ‘ஜி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லுதுனியாவை தோற்கடித்தது. இதன் மூலம் அந்த பிரிவில் 20 புள்ளிகளை பெற்று உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது.

12-ஆவது தடவையாக நெதர்லாந்து உலக கோப்பைக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி 3 முறை 2-ஆவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த பிரிவில் போலந்து 17 புள்ளியுடன் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ், குரோ ஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 31 அணிகள் என இதுவரை 34 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 12 அணிகள் தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply