ஆஷஸ் முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்: 9 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்

ஆஷஸ் முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்: 9 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்

இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று (நவ.21) தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

இவர்களின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்களான லபுஸ்சேன் 9(41), ஸ்டீவ் ஸ்மித் 17(49), உஸ்மான் கவாஜா 2(6) ரன்கள் அடித்து விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹெட் 21(35), கேமரூன் கிரீன் 24(50) மற்றும் அலெக்ஸ் கேரி 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 3 ரன்களுடனும், பிரெண்டன் டாகெட் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 49 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் நாளை(நவ.22) 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மெகா ரெக்கார்டுகளை உடைத்து ஸ்டார்க் வரலாற்று சாதனை…


இந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். 58 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தியதே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க்கின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இதற்கு முன், 2025-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கு வீழ்த்தியதே அவரது சாதனையாக இருந்தது. அதை இன்று (நவ.21) முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியின் மூலம் ஆஷஸ் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-ஆவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஸ்டார்க் எட்டினார். மேலும், புதிய பெர்த் மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த தனிநபர் பந்துவீச்சு இதுவாகும்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் முதல் நாளில் 7 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார். இதற்கு முன் 1990-91ல் கிரேக் மெக்டெர்மாட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி செய்த இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். ஸ்டார்க் 9 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் ஆலன் டேவிட்சனை (8 முறை) அவர் முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகளில் முதல் முறை

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முதல் நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

140 ஆண்டு கால ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறை

140 ஆண்டு கால ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரிய நிகழ்வு அரங்கேறி உள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளின் தொடக்கக் கூட்டணியும் ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தன. ஆஷஸ் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published.