சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை கட் செய்துக் கொடுத்திருக்கிறார் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.
சமீபமாக பல படங்களின் ட்ரெய்லரை தனியாக ஒருவர் உருவாக்கி கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது. அப்படி ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை மட்டும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இதன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அல்போன்ஸ் புத்திரன் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஆகையால், ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை மட்டும் அல்போன்ஸ் புத்திரன் எடிட் செய்துக் கொடுத்திருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் – அல்போன்ஸ் புத்திரன் இருவருமே குறும்படம் இயக்கி வந்த காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பு இப்போது வரை தொடர்ந்து வருகிறது. ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.