ஒரு சாதி சங்கத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது. நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பில், ‘சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களின் பெயர் பலகைகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை ஏன் பிறப்பிக்க வேண்டி வந்தது என்பதையும் நீதிபதி கூறியுள்ளார். ‘‘வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற பிள்ளைகளை பெற்றோரே கொலை செய்யும் சம்பவங்கள் நடப்பதாலும் கைகளில் சாதி கயிறு கட்டிக் கொண்டு புத்தக பைகளில் அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டியுள்ளது’’ என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் சாதி பெயரை நீக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. நாடுசுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் சாதியக் கொடுமைகள் இன்றும் தொடர்வது வேதனைக்குரியது. நோய்நாடி நோய் முதல் நாடி.. என்பதுபோல, பள்ளிகளில் சேரும்போதே மாணவர் என்ன சாதி? என்று கேட்கப்படும் நடைமுறைக்கே முடிவு வரும் நாள்தான் பொன்னாள்!
அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கியை மனதில் வைத்து சாதிக் கட்சிகளை ஊக்குவிப்பது அவர்களுடன் கூட்டணி அமைப்பது சாதியின் பலத்தைப் பார்த்து அதற்கேற்ற வகையில் கட்சி நிர்வாகிகளுக்கும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கும் நிலை என்றாவது ஒருநாள் மாறாதா?
சாதிகள் ஒழிய கலப்புத் திருமணங்களை அரசு இன்னும்பலவிதங்களில் ஊக்குவித்தால்தான் என்ன? கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆணோ, பெண்ணோ அவர்களுக்கு தரமான இலவசக் கல்வி அளிப்பதோடு, அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களது தகுதிக்கு ஏற்ப அரசு வேலை அளிப்பதை உறுதிசெய்தால், சாதியின் வேரில் அது சுடுநீரை ஊற்றாதா?
‘சாதிகள் இல்லையடி பாப்பா‘ என்ற பாரதியாரின் பாட்டை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சாதிகள் ஒழிய வேண்டும் என்று கருதும் எல்லோராலும் வரவேற்கப்படக் கூடியது. எதிர்காலத்தில் சாதியற்ற சமூகம் உருவாக உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நல்லதொரு தொடக்கமாகட்டும்!
தீர்ப்புகள் மட்டுமே தீர்வைத் தந்துவிடாது! செருக்கு கொள்வதற்கோ, கூனிக் குறுகுவதற்கோ சாதி ஒரு அடையாளமாக இருக்கக் கூடாது! மனிதநேயமும், முன்னேற்ற சிந்தனையும் கொண்ட சாதியாக அத்தனை பேரும் மாறும் காலம் வரவேண்டும். அந்தக் காலத்தை நோக்கி நம் மனப்பாங்கை மாற்றிக் கொள்வதே இதற்கு தீர்வாக இருக்க முடியும்! – எஸ்எஸ்