திருவனந்தபுரம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு
நன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என பாதிக்கப்பட்ட நடிகையின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார், மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திலீப் மீது பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது, சாட்சியங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பலாத்கார வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதி ஹனி எம். வர்கீஸ் வழக்கை விசாரித்தார்.
7 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த விசாரணையில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் 6 நபர்களான பல்சர் சுனில்குமார், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில்குமார் மற்றும் சரத் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் “6 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு
நன்றி, ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை” என திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுட்டுள்ளார்.
மேலும் அவரின் பதிவில்; “நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் நீதி முழுமையாக நிலைநாட்டப்பட்டுள்ளது என்று கூற முடியாது. ஏனென்றால், குற்றம் செய்தவர்கள் மட்டுமே தற்போது தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சதித் திட்டத்தை ஆசிரூணம் செய்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இன்றும் பகல் வெளிச்சத்தில் வெளியே உலவுகிறார்கள் என்பது பயங்கரமான உண்மை.
அவர்களும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே, பாதிக்கப்பட்ட நடிகைக்கு முழுமையான நீதி கிடைக்கும்.
காவல்துறையிலும், நீதி அமைப்பிலும் நானும் சமூகமும் வைத்துள்ள நம்பிக்கை வலுப்பெற வேண்டுமானால், அந்தச் சதித் திட்டத்தின் சூத்திரதாரிகள் யாரென்பதைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.
இது அவளுக்காக மட்டுமல்ல. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டியதாகும். அவர்கள் தங்கள் பணி இடங்களிலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் துணிச்சலுடன் தலைநிமிர்ந்து, எந்தவிதமான பயமுமின்றி நடக்கக்கூடிய சூழ்நிலை நிச்சயம் உருவாக வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply