உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் தினமும் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம் – பாஜக முதல்வர் உத்தரவு!

உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் தினமும் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம் – பாஜக முதல்வர் உத்தரவு!

டெல்லி: உத்தரகாண்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பகவத் கீதை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கலாச்சாரம், வாழ்க்கை தத்துவங்களுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து, முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்க இந்த முயற்சி உதவும் என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

எக்ஸ் சமூக ஊடகத்தில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள பதிவில், “அரசுப் பள்ளிகளில் கீதையின் வசனங்களை ஓதுவதை எங்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த முயற்சி மாணவர்களை இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்துடன் இணைப்பதன் மூலம் அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுப்படி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். பகவத் கீதை வாசகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.

மேலும், ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் (Shloka of the Week) தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளியின் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும். மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

இந்த நடவடிக்கைக்கு அம்மாநிலத்தில் வரவேற்பு எழுந்துள்ளது. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, “ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள். ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.