தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை பதிலுரை அளிக்கும்போது, திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து ஆவேசமாக பேசியிருந்தார்.
அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது, முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்த நிலையில் பேரவைத் தலைவர் மறுத்ததால் திமுகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்கள் மூலம் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் திமுக பேரவைத் துணைத் தலைவர் கே.என். நேரு மற்றும் திமுக கொறடா எ.வ. வேலு செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’கே.என். நேரு பேசுகையில், “அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான செய்திகளை ஒரு மணி நேரமாக சினிமா பாணியில் நேற்று முதல்வர் பேசி முடித்திருக்கிறார்.
மிசாவை பற்றி எல்லாம் சொல்கிறார். அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், தவறான செய்திகளை சொல்லக் கூடாது என பேரவைத் தலைவர் முன்பு கோரிக்கை விடுத்தோம். அவர் பேசுவதற்கு சப்ஜெக்ட் இல்லாமல் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எ.வ. வேலு, “மானிய கோரிக்கை தொடர்பாக பேசும்போது சட்டம் – ஒழுங்கு பற்றி முதல்வர் பேச வேண்டும். ஆனால் அதைப் பற்றி பேசவில்லை. தமிழகத்தில் பல கொலைகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்வார் என எதிர்பார்த்தோம்.
முதல்வர் ஏறத்தாழ 27 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அதை எல்லாம் நாங்கள் பொறுமையாக கவனித்துக் கொண்டு இருந்தோம். சட்டமன்றம் விதி 92 என்ன சொல்கிறது என்றால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு பொருத்தவரை அதை சட்டமன்றத்தில் பேச கூடாது என்று ஏற்கனவே சட்டப் புத்தகம் பேரவைத் தலைவரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதைப் பற்றி பேசவே கூடாது என விதி இருக்கும்போது அமலாக்கத் துறையைப் பற்றி முதல்வர் பேசிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றத்தில் இருக்கும் அப்பிடவிட்டை முழுமையாக படித்துக் கொண்டிருந்தார்.
அவர் சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் மிசாவை பற்றி பேசும்போது அவருக்கே உரித்தான உடல் மொழியை வைத்து பேசிக் கொண்டிருந்தார். மிசாவை பற்றி பேசி தியாகத்தை கொச்சைப்படுத்தினார்.
சர்க்காரியா கமிஷனை பொருத்தவரை அதற்கு முன் எத்தனையோ பதில்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்லி இருக்கிறார், சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்
மிசாவை பொருத்தவரை அது ஒரு ஜனநாயக போராட்டம். அதை கொச்சைப்படுத்தும் விதமாக உடல் மொழியில் முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது.
இதை மூன்றையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதை அவர்கள் நீக்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம் ஆனால் இவர்கள் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சத்தியபாமா என்ற சட்டமன்ற உறுப்பினரை மாற்றுத்தலைவராக அமர வைத்தார்கள். ஆனால் அதை ரீல்சில் இதற்கு முன்னால் ஒரு பெண் சட்டமன்ற தலைவராக அமர்ந்ததே இல்லை என்று பொய்களை பரப்பி விட்டார்கள்.
நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு பேரவைத் தலைவர் இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார்” என்று குற்றஞ்சாடினார்.
