ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தூதரக நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் இந்த புதிய தடையை அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் எட் மிலிபாண்ட் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ‘’மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதால் ஏற்படும் அநீதியையும் துயரத்தையும் இனியும் வெறுமனே கண்டிப்பதுடன் பிரிட்டன் நிறுத்திக்கொள்ள முடியாது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மேலும் துயரங்கள் ஏற்படுவதற்கும், இரு நாடுகள் தீர்வை அழிப்பதற்கும் நாம் பார்வையாளர்களாக இருக்க மறுக்கிறோம் என்று மிலிபாண்ட் கூறினார். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் தனித்தனி நாடுகள் அமைவதை உள்ளடக்கிய இரு நாடுகள் தீர்வை பிரிட்டன் நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.
மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்பதே பிரிட்டனின் நிலைப்பாடு என்றும் மிலிபாண்ட் தெரிவித்தார். மேலும், மேற்குக் கரையின் சில பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக பிரிட்டன் கருதுவதாகவும் அவர் கூறினார்.
ஜெருசலேமுக்கு அருகே மேற்குக் கரையில் செயல்படுத்தப்படும் E1 குடியேற்றத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனியர்கள் எதிர்காலத்தில் தனிநாடு அமைக்கக் கோரும் பகுதிகளை இந்தத் திட்டம் துண்டிக்கும் என்றும், இதனால் இரு நாடுகள் தீர்வுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், டெல் அவிவில் உள்ள பிரிட்டன் தூதரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர், கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், பிரிட்டனின் நடவடிக்கை தங்கள் நாட்டின் அக்டோபர் மாத இறுதியில் நடைபெற உள்ள தேர்தலில் தலையிடும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார்.
2025-ஆம் ஆண்டு பாலஸ்தீன தனிநாட்டை பிரிட்டன் அங்கீகரித்தது. மேலும், கடந்த ஜூன் மாதம் மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்கள் மீதான வன்முறைகளுக்கு நிதியுதவி அளித்ததாகவும், அவற்றை செயல்படுத்தியதாகவும் கூறப்படும் இஸ்ரேலிய அமைப்புகள் மீது பிரிட்டன் தடைகளை விதித்தது.
மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் பெரும்பாலானவை விவசாயப் பொருள்களாகும். குறிப்பாக புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மதுபானங்கள் இதில் அடங்கும். எனினும், இவை இஸ்ரேலின் மொத்த வர்த்தகத்தில் மிகச் சிறிய பங்கையே வகிக்கின்றன.
மேற்குக் கரையில் இருந்து வரும் பொருள்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் நெதர்லாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் இணைந்துள்ளதாக மிலிபாண்ட் தெரிவித்தார்.
