தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். 

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், ’’தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்னை. மானியக் கோரிக்கையிலும் பிரச்னை. அதனால் மக்கள் பிரச்னைகளை அவையில் முழுமையாகப் பேச முடியவில்லை.

இன்றைக்கும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் ஆரம்பித்ததும் திமுகவினர் பேச முற்படும்போது பிரச்னை ஏற்பட்டது. வழக்கமாகவே திமுகவினர் பேசும்போது அமைச்சர்களோ, ஆளும் கட்சி எம்எல்ஏக்களோ ஏதாவது ஒரு பிரச்னையை, குற்றச்சாட்டை எதிர்க்கட்சி மீது சுமத்துகிறார்கள்.

பிறகு எதிர்க்கட்சித் தரப்பில் பதில், அதற்கு ஆளுங்கட்சியினர் விளக்கம், மீண்டும் எதிர்க்கட்சி பதில் என்று மாறி மாறி இருதரப்பினரும் பதில் சொல்லி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது. இன்றைக்கும் சுமார் 1 மணி நேரம் வீணானது.

பின்னர் சபாநாயகர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அவை நடந்தாலும், மீண்டும் ஆளும் கட்சியினர் திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டுகின்றனர். இதில், தவெக ஆட்சியில் 10 மணி நேரம் சட்டப்பேரவை நடைபெறுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால் 3 மணி நேரம் தான் அவை நடைபெறுகிறது. மீதி 7 மணி நேரம் ஆளும், எதிர்க்கட்சியின் பிரச்சினையால் சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுகிறது.

மற்ற உறுப்பினர்களால் கேள்வி கேட்கவே முடியவில்லை. கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. அதேபோல் எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் 3 அமைச்சர்கள் தான் பதில் சொல்கிறார்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதே தீர்வுக்கான வழி. இதுதான் கடந்தகால வரலாறு. ஆனால் தவெக ஆட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு உரிய அமைச்சர்களின் பதில் இல்லை.

ஆட்சிக்கு வந்த இந்த 4 மாதங்களில் மட்டும் தவெக அரசு ரூ.34,000 கோடி கடன் வாங்கியுள்ளது. வாங்கிய ரூ.34,000 கோடி கடனில் ரூ.31,000 கோடி வருவாய் செலவினமாக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது. 

4 மாத கால தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். மின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தவெக தலைமையில் தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி தான் நடைபெறுகிறது.

ஏற்கனவே கடும் நிதி நெருக்கடி நிலவும் போது புதிய திட்டங்களுக்கு நிதி எங்கே உள்ளது. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது; குதிரை பேரம் மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்க வைத்துள்ளது தவெக.

எனவே தற்போது தேவையின்றி இடைத்தேர்தல் வருவதற்கு தவெக தான் காரணம். ஏற்கனவே அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்கள் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என, ஆட்சியை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் கூறுகிறார். இந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளது. புதிய தலைமை செயலகம் தற்போது கட்ட என்ன அவசியம் என்றும் சாடியுள்ளார்.