திரைப்படத்தில் நடிப்பதுபோலவே இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார் விஜய் என பரந்தாமன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘’சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்வதே மரபு. 13 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. எத்தனை ரீல்ஸ் போடலாம் என்பதை மையமாக வைத்தே முதல்வரின் பதில் இருந்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் 15 கேள்விகளுக்கு முதல்வர் பதில் தரவில்லை. தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து கூட முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதுபோலவே இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார் விஜய். மக்கள் மடிந்து கொண்டிருந்த போது பிரசாரம் செய்த விஜய்க்கு மிசா தியாகம் பற்றி தெரியாது. மிசாவை பற்றி அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியுமா? இஸ்மாயில் கமிஷன் அறிக்கையை அனுப்பி வைக்கிறேன், படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார். விஜயின் தாயாரைக் குறை சொல்லிப் பேசிய பாஜக தலைவரையே கைது செய்யத் துப்பில்லை. அமைச்சர் நிர்மல் குமார் சட்டத்தை தெரிந்து பேச வேண்டும் இல்லையென்றால் பதவி விலக வேண்டும். தவெகவினர் கஞ்சா கிடத்துகிறார்கள்; அதுகுறித்து கேள்வி எழுப்பினோமே, அதற்கு முதல்வரின் பதில் என்ன?
மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் சட்டப்பேரவையில் ஆட்சியை பற்றி, மக்கள் திட்டங்கள் பற்றி பேச வேண்டும். எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்தாரா என்று மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டமன்றத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பற்றி முதல்வர் விஜய் பேசலாமா? முதல்வருக்கு மரபு, மாண்பை கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
