மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: பொதுநல வழக்கு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: பொதுநல வழக்கு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய நடைமுறையை வகுக்கவும், 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர்.

இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம் பெருந்துறை கரூர் விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.