தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த பேராசிரியரும், தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90வது வயதில்  வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது மறைவையடுத்து முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைக்கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

சாலமன் பாப்பையாவின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அவரது உடலை சுமந்து வந்த வாகனத்துக்கு பொதுமக்கள் வழிநெடுக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மதுரை வெப் மெமோரியல் தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.

துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு கவுரவ மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து தத்தநேரி மின் மயானத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே, சாலமன் பாப்பையாவின் அஸ்தியை திருப்புவனம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் கரைக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். அங்கு புனித நீரில் அஸ்தியை கரைத்த பின்னர், அந்த புனித நீரை எடுத்துக்கொண்டு வந்து, அவரது மனைவி ஜெயபாயின் கல்லறை மீது தெளிக்கவும் உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழை பட்டிமன்ற மேடைகளில் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் வாழ்விலும் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகியுள்ளது. தமிழின் பேரரசர் என போற்றப்பட்ட அவரது குரல் இனி மேடைகளில் ஒலிக்காது என்றாலும், அவர் விதைத்த தமிழ் சிந்தனைகளும், இலக்கியப் பணிகளும், பட்டிமன்ற மரபும் தலைமுறைகளை கடந்து தொடரும்.

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

சாலமன் பாப்பையாவுக்கு மகன், மகள் உள்ளனர். அவரது மனைவி ஓரிரு ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்காக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்தது தான் அவரது கடைசி பட்டிமன்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.