தமிழகத்தில் 180 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

தமிழகத்தில் 180 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

தமிழகத்தில், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாள் தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில், தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும், ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 நபர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும் அவர்களின் மெச்சத்தக்க பணியை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கிட முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார்.

மேலும், 19.05.2026 அன்று காலை சுமார் 09.45 மணியளவில், நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர், மேற்படி தகவலைக் கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையைப் பயன்படுத்தி, தன் சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்திச் சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புச் செயலைப் பாராட்டி இவருக்கு “தமிழக முதலமைச்சரின் தீயணைப்புப் பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். மேற்கண்ட பதக்கங்கள், முதல்வர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.