இங்கிலாந்தில் இருந்து பிரியும் உரிமை: 3 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

இங்கிலாந்தில் இருந்து பிரியும் உரிமை: 3 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

இங்கிலாந்தில் இருந்து பிரிந்து தனி நாடுகளாக உருவாகும் நோக்கில், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

வேல்ஸ் தலைநகர் கார்டிஃப் நகரில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்காட்லாந்தின் தேசிய கட்சியான எஸ்.என்.பி., வேல்ஸின் பிளாய்ட் கிம்ரு மற்றும் வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் ஒற்றுமையை ஆதரிக்கும் சின் ஃபெயின் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த 3 கட்சிகளும் இங்கிலாந்தில் இருந்து பிரிவதை ஆதரித்து வருகின்றன. எனினும், பிரிவை எவ்வாறு செயல்படுத்துவது, அதற்கான காலகட்டம் ஆகியவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன.

கூட்டறிக்கையில், எங்கள் நாடுகளுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது. ஜனநாயகத்தை தடுக்கவோ, எங்கள் மக்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பாதிக்கவோ லண்டனில் உள்ள இங்கிலாந்து அரசு அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெறுவதை ஆதரிப்பது இதுவே முதல் முறையாகும். எங்கள் நாடுகளின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்ததாக இருக்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அரசின் காலம் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கான தெளிவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்பு மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருவதாகவும், தங்களது இயக்கங்களுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் தங்களது அரசுகளின் பிரதிநிதிகளாக அல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் 3 கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நடைமுறையில் இணைந்து செயல்படக்கூடிய துறைகளை கண்டறிந்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படவும் உறுதிபூண்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.