லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்தவும், புதிய மையங்களை நிறுவவும் ரூ.12,300 கோடி முதலீட்டில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், புதிதாக நிறுவுவதற்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில், 2,000-க்கும் மேற்பட்ட உயர்மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது. சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘GCC காரிடார்’ பகுதியில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group), தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவுபடுத்த உறுதியளித்துள்ளது.

இதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா சொல்யூஷன்ஸ் (Sigma AB Pvt Ltd-ன் ஒரு பகுதி) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்திற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரூ.11,000 கோடிக்கு ஒப்பந்தம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நேற்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியிலும், இங்கிலாந்திற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.