திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 5 முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் கட்சி அலுவலகங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. நாள்தோறும் காலை முதல் இரவு வரை அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று (செப்.15) கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருடன் ஈரோடு எம்பி பிரகாஷ், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு தொண்டர்கள் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் பரந்தாமன். அப்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘’திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் வாழ்த்துக்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் இன்று அவருக்கு மலர் மாலை அணிவித்து தனது வேட்பு மனுவை அவரிடம் வைத்து வாழ்த்துக்கள் பெற்று வேட்பு மனு தாக்கல் செய்வது பெரும் பாக்கியம்.

தவெக வேட்பாளர்களை நாங்கள் தொகுதி மக்களை ஏமாற்ற மாட்டோம்; எத்தனை முனைப்போட்டி வந்தாலும் திமுக வெற்றி பெறும். ” என்றார்.
மேலும் அவர், ‘’கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும், மதுராந்தகம் மக்கள் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள் என தெரிவித்தார்.
தவெக கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் கூறியது குறித்து கேட்டபோது, கூட்டணியின் பெயர் மட்டும்தான் வெற்றி உள்ளது, அது வரும் தேர்தல் இறுதியில் திருமாவளவன் தெரிந்து கொள்வார்.
திமுகவில் யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் எங்களது தலைவர். திருமாவளவனின் அறிவுரையை நாங்கள் ஏற்கிறோம். கடந்த இடைத்தேர்தல் வரலாறுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது, எம்ஜிஆர் காலத்திலேயே அது நடந்துள்ளது” என்றார். நாளை அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் செப்.,19ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிடும்.
