தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு

தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம் நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். பூஜைக்கு பின், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி பெற்று பொது இடங்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இவ்வாறு பூஜிக்கப்பட்ட சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்டுவிட்டன.

பெரும்பாலான பிரமாண்டமான விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. அந்தந்த பகுதிகளில் காவல்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைக்கின்றனர்.

சென்னையில் பல்வேறு அமைப் புகளின் சார்பில் மொத்தம் 1,562 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 5 நாட்களாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், அவற்றை நேற்று மற்றும் இன்று கடலில் கரைக்க காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 அனுமதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சியுடன் இணைந்து செய்யப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக சிவசேனா மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, நேற்று கடலில் கரைக்கப்பட்டன. தொடர்ந்து இந்து முன்னணி உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்காக கடற்கரைகளில் 80 டன், 20 டன் ராட்சத கிரேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் 16,500 அதிகாரிகள், காவலர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.