அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்வர் விஜய் வருகையையொட்டி பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மேலும், முதல்வரை காண்பதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே திரண்டிருந்தனர்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த இரு தொகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் இத்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து, உடல்நலம், பள்ளி வருகை மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில், இத்திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாகப் பயனடைவார்கள். இதற்காக 2026-27-ம் நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. பிற நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் தினமும் காலையில் கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் சத்தான, சுவையான காலை உணவு வழங்கப்படும் என முதல்வர் விஜய் பெயரில் மாணவர்களின் பெற்றோர் கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
முதலில், காமராஜர் பிறந்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை செப்டம்பர் 17-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதால், தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டு சென்னையில் நேற்று நடைபெற்றது.
