2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற இலக்கு: அமித் ஷாவின் 3 ஆண்டு செயல் திட்டம் வெளியீடு

2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற இலக்கு: அமித் ஷாவின் 3 ஆண்டு செயல் திட்டம் வெளியீடு

2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான 3 ஆண்டு செயல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கோவாவில் 3 நாள் பயணமாக சென்றுள்ள அமித் ஷா, அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த திட்டத்தை அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் தடுப்பு அமலாக்கம், உளவுத்தகவல் பகிர்வு, நிதி விசாரணை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2014 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.1.89 லட்சம் கோடி மதிப்பிலான 1.19 கோடி கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 48.66 லட்சம் கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் 4 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என அவர் கூறினார். உளவுத்தகவல் மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அமலாக்க நடவடிக்கைகள், போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் கட்டுப்பாடு, போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் பாதிப்பைக் கட்டுப்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை அந்த 4 அம்சங்களாகும்.

அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான 100 போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளில் பதுங்கியுள்ள போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 100 பேரை இந்தியாவுக்கு அழைத்து வரவும், ரகசியமாக செயல்படும் 100 போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்களை அழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

மேலும், இந்த பிரசாரம் 50 கோடி மக்களை சென்றடையும் என்றும், ஒரு லட்சம் ‘நஷா முக்த் மித்ரா’க்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை 1,751 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

கோவாவில் ஏற்கெனவே போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமித் ஷா, போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரத்துக்கு பொதுமக்களும் ஊடகங்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.