காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னையில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை காலை தொடக்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் நாளை தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படுவதன் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாகப் பயன்பெறுவர்.

இதற்கென நிகழ் நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.

நகரப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளையொட்டி உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 12,857 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அந்தந்தப் பள்ளியிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

இந்த காலை உணவுத்திட்டம் முன்னதாக பெரியார் பிறந்த நாள் அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றிருந்ததால்  இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டு நாளை தொடங்கி வைக்கிறார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அதே நாளில் செயல்படுத்தப்படும்.

விரிவாக்கப்பட்ட இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்டதாக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்யவும், திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டுமென்றும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இத்திட்டத்திற்காக பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முறையாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.