உறவினர்களின் திருமணத்தில் பங்கேற்க ஷர்ஜீல் இமாமுக்கு 7 நாள் இடைக்கால ஜாமீன்

உறவினர்களின் திருமணத்தில் பங்கேற்க ஷர்ஜீல் இமாமுக்கு 7 நாள் இடைக்கால ஜாமீன்

2020-ம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவர சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமுக்கு, உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லி நீதிமன்றம் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, அக்டோபர் 4 முதல் 10-ம் தேதி வரை அவர் ஜாமீனில் இருப்பார்.

ஷர்ஜீல் இமாமின் வழக்கறிஞர் அகமது இப்ராகிம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஷர்ஜீல் இமாமின் உறவினர்கள் இருவரின் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு திருமணம் டெல்லியிலும், மற்றொரு திருமணம் பீகாரிலும் நடைபெற உள்ளது. அவரது சொந்த ஊரான ஜெகானாபாத்தில் அக்டோபர் 9-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.

ஜாமீன் நிபந்தனைகள் தொடர்பான உத்தரவை தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும், வழக்கமாக விதிக்கப்படும் நிபந்தனைகள் அமல்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். முந்தைய முறை தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு உத்தரவாதப் பத்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த முறையும் இதேபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, ஷர்ஜீல் இமாமின் வழக்கமான ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதி ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், அடுத்த விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு நிர்ணயித்துள்ளது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான சதியில் ஈடுபட்டதாகக் கூறி, ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்ளிட்ட பலர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது இந்த வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.