மதுரை: ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற கோட்பாடு அனைத்து வழக்குக்கும் பொருந்தாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் காடனேரி கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சி.மார்க்கண்டன், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் 1983-ல் கிராம தலையாரியாக பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் பணிபுரிந்து கிராம நிர்வாக அலுவலராக பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எனது உண்மையான பிறந்த தேதி 23.3.1961 ஆகும். ஆனால் நான் பணியில் சேர்ந்த போது எனது பிறந்த தேதி 28.1.1958 என தவறுதலாக பதிவு செய்யப்பட்டது.
இந்த தவறு 2015-ல் தான் எனக்கு தெரியவந்தது. பணி பதிவேட்டில் எனது பிறந்த தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டிருப்பதை சரி செய்யக்கோரி மனு அளித்தேன். ஆனால் பிறந்த தேதி தவறை சரி செய்ய பணியில் சேர்ந்த 5 ஆண்டிற்குள் மனு அளிக்க வேண்டும், ஆனால் பணியில் சேர்ந்து 32 ஆண்டுக்கு பிறகு மனு அளித்திருப்பதாக கூறி எனது கோரிக்கையை நிராகரித்ததுடன், என்னை பணியிலிருந்து நிறுத்தி உத்தரவிட்டனர்.இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் ஓய்வு பெறும் வரை பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பணிபுரிந்து 31.3.2019-ல் ஓய்வு பெற்றேன். நான் பணியிலிருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பணியில் சேரும் வரையிலான காலத்திற்கு எனக்கு ஊதியம் மற்றும் ஓய்வு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால் எனக்கு 1.2.2018 முதல் 18.3.2019 வரை கிராம நிர்வாக அலுவலர் பணிக்குரிய ஊதியம், ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடைகள் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பட்டு தேவனாந்த் விசாரித்தார். அரசு தரப்பில், “மனுதாரர் ஊதியம் மற்றும் ஓய்வூதியபலன்கள் கேட்கும் கால கட்டத்தில் அவர் பணியில் இல்லை. ‘வேலையில்லை; ஊதியம் இல்லை’ (நோ ஒர்க், நோ பே) பட்டியலில் வருகிறார். எனவே இந்த காலத்துக்குரிய ஊதியம், பணப்பலன்களை கோர முடியாது,” எனக் கூறப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குறிப்பிட்ட அந்த காலத்தில் பணியில் இல்லாமல் இருந்ததற்கு மனுதாரர் காரணம் அல்ல. அவரது உண்மையான பிறந்த தேதி அடிப்படையில் பணி ஓய்வு வழங்கியிருந்தால் அவர் பணியில் இருந்திருப்பார். இதனால் ஓய்வு பெறும் வரை அனைத்து பணப்பலன்களை பெற மனுதாரர் தகுதியானவர். வேலையில்லை; ஊதியம் இல்லை என்ற கோட்பாடு எல்லா வழக்கிற்கும் பொருந்தாது. எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு பணியில் இல்லாத காலத்துக்குரிய அனைத்து பணப்பலன்களையும் 4 வாரத்தில் வழங்க வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.