ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்வு

பீகாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைய உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், பாஜக சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், பாஜக 89, ஜேடியு 85, எல்ஜேபி (ஆர்வி) 19, ஹெச்ஏஎம் 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வெற்றி பெற்றன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொண்டு வருகிறது.

இதன் முக்கிய நடவடிக்கையாக, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களின் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமாரின் பாட்னா இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல், பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளராக உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றக் குழு துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். கேசவ பிரசாத் மவுரியா இதனை அறிவித்தார்.

பின்னர் பேசிய சாமராட் சவுத்ரி, “கட்சி எந்த ஒரு பொறுப்பைக் கொடுத்தாலும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல நான் பாடுபடுவேன். என் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை, 3.30 மணி அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்னா காந்தி மைதானத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.