புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் ரெட்இட் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எனக்கு தற்போது 42 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தில் யாருமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே பெற்றோர் இறந்துவிட் டனர். இனியும் திருமணம் செய்துகொள்ளும் திட்டமில்லை.
எனக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லை. மேலும் என்னிடம் ரூ.2.5 கோடி சேமிப்பு (பிக்ஸட் டெபாசிட்) உள்ளது. கடனும் கிடையாது. நான் அமெரிக்காவில் சில காலம் பணியாற்றினேன். இதன்மூலம் எனக்கு 62 வயதாகும் போது மாதம்தோறும் 1,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்து சோர்வடைந்து விட்டேன்.
இதனால் மன அழுத்தத்துடன் காணப்படுகிறேன். மேலும் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற சிந்தனையும் உள்ளது. இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலை மீது வெறுப்பு வந்துவிட்டது. எனக்கு தற்போது மாதம் ரூ.50 ஆயிரம் செலவுக்குத் தேவைப்படுகிறது. எனவே, இப்போது நான் ஓய்வு பெற்றுவிடலாமா என்று யோசனை கேட்கிறேன். நான் ரூ.2.5 கோடி மதிப்பு சேமிப்புடன் ஓய்வு பெறலாமா என்பதை ரெட்இட் சமூக வலைதள பயனர்கள் யோசனை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போதிய இடைவேளை தேவை: அரசு மனநல காப்பக பேராசிரியர் பூர்ண சந்திரிகா கூறியதாவது: போட்டிக்குரிய உலகில் பணிச்சூழல் மாறியுள்ளதால் தானாகவே மனச்சோர்வு ஏற்படும். பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு இடையே பணிபுரிகின்றனர். நமக்குரிய குணநலன்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.
வேலை – தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டுக்கும் சமமான நேரத்தை ஒதுக்க வேண்டும். 42 வயது நபரை பொருத்தவரை, தான் செய்வது சரியா என்ற குழப்பத்திலேயே அவர் பதிவிட்டுள்ளார். இவரைப் போன்றோருக்கு நம் கொடுக்கும் முக்கிய ஆலோசனை என்பது போதிய இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
என்ன செய்யலாம்…? – பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன் கூறியதாவது: அந்த நபர் முழு சேமிப்பான ரூ.2.5 கோடியையும் வங்கி வைப்புகளாக வைத்திருக்கிறார். அதற்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி எனில், ஆண்டுக்கு வரி போக 17.5 லட்சம் கிடைக்கும். மாதம் ஒன்றுக்கு ரூ.1.46 லட்சம் கிடைக்கும். அவருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை. அவர், 10 முதல் 20 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு எடுக்கலாம்.
தனி ஒருவராக வாழ்வதற்கு இந்த தொகை சில ஆண்டுகளுக்கு போதுமானது. ஆனால் அவரது 60, 70, 80-வது வயதுகளில் இந்த தொகை போதாது. அதனால் அவருக்கு வரும் வட்டி வருமானத்தில் மீதம் செய்து பரஸ்பர நிதியிலோ அல்லது அஞ்சலக வங்கி தொடர் சேமிப்பிலோ செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.