அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேச உள்ளார்.

இதற்காக, தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் உள்ள கொண்டரசம்பாளையம், மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் செம்மலை சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார். 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராகவும் பணியாற்றினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தனக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று செம்மலை அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக செம்மலை அறிவித்ததாகவும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதே தனது முடிவுக்குக் காரணம் என அவர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தாராபுரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.