தாராபுரம் பிரசார மேடையில் வேட்பாளர் சத்தியபாமாவின் காதோரம் பேசியது என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் நேற்று முன்தினம் (அக். 1) பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார மேடையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அமைச்சர் ராஜ்மோகனுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுப் பேசியதும் சத்தியபாமாவின் காதோரம் வந்து அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் தன்னை அவதூறாகப் பலர் பேசுவதாகக் கூறி கண்கலங்கினார். 2 மாதங்களாக செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகவும், சமூக வலைதள விமர்சனங்களால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு கண்கலங்கினார். அருகில் இருந்த முதல்வர் விஜய், சத்தியபாமாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரது தோள்களைப் பற்றிக்கொண்டு ஆசுவாசப்படுத்தினார்.

இந்நிலையில், செல்போன் அழைப்பைத் தொடர்ந்து சத்தியபாமாவின் காதுகளில் ராஜ்மோகன் பேசிய பிறகே சத்தியபாமா அழுததாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருப்பதால் உரையை விரைந்து முடிக்குமாறு சத்தியபாமாவிடம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் கண்ணீரை அரசியல் காரணத்துக்காகத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தவெக கூட்டணி, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் இணைவது குறித்து தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணித் தலைவர்கள் கூடிப் பேசி தான் முடிவு எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.