சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் இன்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த 18 ஆண்டுகளாக அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து அணி நிர்வாகம் பிரிந்தது. புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பு டோனியிடம் வழங்கப்பட்டதாக சி.எஸ்.கே. தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.
பிளெமிங்குக்கு பதிலாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தியர் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று டோனி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜாகீர் கான் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐ.பி.எல். தொடரில் டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணியில் வீரராக பிளெமிங் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் சி.எஸ்.கே. அணி 2-வது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து 2009-ம் ஆண்டு முதல் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பொறுப்பேற்றார். தொடர்ந்து 18 ஆண்டுகள் அவர் அணியுடன் இணைந்து செயல்பட்டு, ஐ.பி.எல். வரலாற்றில் குறிப்பிடத்தக்க பயிற்சியாளர் பயணத்தை அமைத்தார்.
அணியில் இருந்து விலகியது குறித்து பிளெமிங் கூறுகையில், 18 ஆண்டுகள் என்பது விளையாட்டில் ஒரு நீண்ட காலம். நன்றியுணர்வுடன் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடைபெறுகிறேன். எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் சி.எஸ்.கே. அணியுடனான காலம் மிகப்பெரிய பெருமையாகும். நாங்கள் சாதித்த அனைத்தையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
ஒன்றாக இணைந்து மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடினோம். கடினமான தருணங்களையும் கடந்து வந்தோம். என்றும் நினைவில் நிற்கும் பல நினைவுகளை உருவாக்கியுள்ளோம். சி.எஸ்.கே. எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும். வரும் ஆண்டுகளிலும் அணியை தொடர்ந்து ஆதரிப்பேன் என்றார்.
