மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ரிவ்யூ செய்யவில்லை, ரீல்ஸ் தான் எடுத்திருக்கிறார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதியில் இரவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
தவெக அரசின் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்படும் அவலநிலை ஏற்பட்டு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மின்வெட்டு பிரச்னை அதிகரித்ததையடுத்து, சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை தொடர்கிறது.
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் 3 மாதங்களில் முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் இன்று காலை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
எனினும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக் கொண்டிருக்கையில் மின்வெட்டு ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தது. ஜெனெரேட்டர் மாற்றப்பட்டதால் சில வினாடிகள் மின்சாரம் தடைப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின் வாரியத் தலைமையகத்தில் முதல்வர் Review செய்யவில்லை. Reelsதான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல” என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
