டெல்லியில் போராட்டத்துக்கு முன்பே சிஜேபி நிர்வாகிகள் கைது

டெல்லியில் போராட்டத்துக்கு முன்பே சிஜேபி நிர்வாகிகள் கைது

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டெல்லி போலீஸார் கைது செய்தனர். போராட்டத்துக்கு டெல்லி போலீஸார் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட முயற்சிப்பவர்களைப் பல்வேறு இடங்களில் கைது செய்து வருகின்றனர்.

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், விமானத்துக்குள் சென்ற போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை போலீஸார் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதேபோல், சிஜேபியின் சட்டக் குழுத் தலைவர் ரத்னா சிங்கும் கைது செய்யப்பட்டார். ஜந்தர் மந்தரை நோக்கி மற்ற மூன்று வழக்கறிஞர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களது காரை வழிமறித்த போலீஸார் நால்வரையும் கைது செய்தனர்.

தாம் கைது செய்யப்பட்டது குறித்து ரத்னா சிங் வெளியிட்டுள்ள காணொலியில், “என்னைக் கைது செய்வதற்காகக் காவலர்கள் இன்று காலை எனது வீட்டுக்கு வந்தனர். நான் வீட்டில் இல்லை என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த எங்களை எந்தக் காரணமும் தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர்.

எங்களைக் கைது செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் உள்ளதா என்று கேட்டபோது, மேலிடத்தில் இருந்து உங்களைக் கைது செய்ய உத்தரவு வந்துள்ளதாகக் காவலர்கள் தெரிவித்தனர். இதனால், நாங்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

சிஜேபியின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 23,000 வீரர்களும் என மொத்தம் 38,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்கிறார்களா என்பதை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதற்காக முக்கியச் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடச் செல்வதாகக் கருதப்படுபவர்களைப் போலீஸார் கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதனிடையே, தங்கள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு சிஜேபி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வாதிகார அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாகவும், அவசரநிலைக் காலத்தை நினைவூட்டுவதாகவும் அந்த அமைப்பு விமர்சித்துள்ளது.