கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 மாநகராட்சிகளை கைப்பற்றி உள்ளது. இதுதவிர ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி ஒரு மாநகராட்சியிலும், பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், கொச்சி, திரிச்சூர், கண்ணூர் என்று மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கொச்சி மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி உள்ளது. இங்கு 76 வார்டுகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 46 வார்டுகளில் வென்றுள்ளது. இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 20 இடங்களிலும், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 6 இடங்களிலும் வென்றுள்ளனர். 4 இடங்களில் மற்றவர்கள் வென்றனர். இதனால் கொச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சியின் வசம் சென்றுள்ளது.
திரிச்சூர் மாநகராட்சியில் 56 வார்டுகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 33 வார்டுகளில் வென்றுள்ளனர். இடதுசாரிகளின் கூட்டணி கட்சியினர் 11 வார்டுகளிலும், பாஜக கூட்டணியினர் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் 4 வார்டுகளை கைப்பற்றி உள்ளனர். இதனால் இந்த மாநகராட்சி காங்கிரஸ் வசமாகி உள்ளது.
56 வார்டுகள் கொண்ட கண்ணூர் மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 36 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 15 இடங்களிலும், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற கட்சி ஒரு வார்டில் வென்றுள்ளது. இதனால் கண்ணூர் மாநகராட்சி காங்கிரஸ் வசமாகி உள்ளது.
56 வார்டுகள் கொண்ட கொல்லம் மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி 27 வார்டுகளிலும், இடதுசாரிகளின் கூட்டணி 15 வார்டுகளிலும், பாஜக கூட்டணி 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த மாநகராட்சி காங்கிரஸ் கூட்டணியின் வசமாகி உள்ளது.
கோழிக்கோடு மாநகராட்சியில் மொத்தம் 76 வார்டுகள் உள்ளன. இங்கு இடதுசாரி கூட்டணி 34 வார்டுகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 26 வார்டுகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 13 வார்டுகளிலும், மற்றவர்கள் 3 வார்டுகளிலும் வென்றுள்ளன. இதன்மூலம் இந்த கோழிக்கோடு மாநகராட்சி மீண்டும் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது.
101 வார்டுகள் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 50 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு இடம் தேவையாக உள்ள நிலையில் பிற கட்சிகளில் போட்டியிட்டு வென்ற 2 பேரின் ஆதரவை பாஜக பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் விவரம்:
152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி-79, இடதுசாரி கூட்டணி-63, மற்றவை-10
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி- 7, இடதுசாரி கூட்டணி- 7
87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி -54, இடதுசாரி கூட்டணி – 28, பாஜக கூட்டணி- 1 மற்றவை- 4,
6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி – 4, இடதுசாரி கூட்டணி – 1, பாஜக கூட்டணி- 1 இடங்களைப் பெற்றது.
Leave a Reply