முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்

முதல்வரின் சைகை மனித மாண்புகளுக்கு எதிரானது: திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த திங்கள்கிழமை (செப். 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கியபோது முதல்வர் விஜய் மிசா குறித்துப் பேசும்போது, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சுட்டிக் காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார்.

முதல்வர் விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், ”எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என்று முதல்வர் விஜய் நேற்று (செப். 8) விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தவெக அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முதல்வர் விஜய்யின் செயலை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காவல்துறை மானியத்தில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும். அதே போல முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும். மிசா காலத்து அரசப் பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்கு முறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக் குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.