தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

இடைத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

அ.தி.​மு.க எம்.​எல்.​ஏ.க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன. இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களே வெற்றி பெற்று இருந்ததால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க களமிறங்குகிறது. அதனால் ஆளும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க.வும் போட்டியிடுவதால் இத்தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவக்கூடும்.