முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். அங்கு கனக துர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதற்காக, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். பிற்பகல் 3.45 மணியளவில் விஜயவாடா சென்றடைந்த அவருக்கு, ஆந்திர அரசு சார்பில் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, விஜயவாடா விமான நிலையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கை அம்மன் கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு அவருக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. பின்னர், கனக துர்கை அம்மனை வழிபட்டார்.

முதல்வர் விஜய்யின் வருகை மற்றும் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முதல்வர் விஜய்யைக் காண ஏராளமான மக்கள் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் விஜய் சந்தித்தார். அவருக்கு சந்திரபாபு நாயுடு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் – ஆந்திரம் இடையிலான நதிநீர் பங்கீடு, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.