எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1  மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவித்தார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்குகிறது. ஆங்கிலத் தேர்வு மார்ச் 25-ம் தேதியும், கணிதத் தேர்வு மார்ச் 31-ம் தேதியும், அறிவியல் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதியும், சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதியும் நடைபெறுகின்றன. விருப்ப மொழிப் பாடத்துக்கான தேர்வு ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும். இத்தேர்வுக்கான முடிவுகள் மே 20-ம் தேதி வெளியிடப்படும்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுடன் தொடங்குகிறது. ஆங்கிலத் தேர்வு மார்ச் 16-ம் தேதியும், வேதியியல், கணக்கியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 18-ம் தேதியும் நடைபெறுகின்றன.

கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22-ம் தேதியும், இயற்பியல், பொருளியல் தேர்வுகள் மார்ச் 24-ம் தேதியும் நடைபெறுகின்றன. கணினி அறிவியல், உயிரி வேதியியல் தேர்வுகள் மார்ச் 30-ம் தேதியும், உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி வெளியிடப்படும்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுடன் தொடங்குகிறது. ஆங்கிலத் தேர்வு மார்ச் 8-ம் தேதியும், வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வுகள் மார்ச் 12-ம் தேதியும் நடைபெறுகின்றன.

கணினி அறிவியல், உயிரி வேதியியல் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதியும், உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வுகள் மார்ச் 19-ம் தேதியும் நடைபெறும். இயற்பியல், பொருளியல் தேர்வுகள் மார்ச் 23-ம் தேதியும், கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் மார்ச் 29-ம் தேதியும் நடைபெறுகின்றன.

பொதுத்தேர்வுகளுக்கு முன்னதாக, பிப்ரவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர் என்றும் அவர் கூறினார்.