பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம், சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானபோதே, பல்வேறு தரவுகளுடன் பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். பட்டினப்பாக்கம் மீனவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அரசாணை வெளியாகியிருக்கிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

எனினும், எந்த இடத்தில் அமையும் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. முதற்கட்டமாக சென்னை பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்கள் இதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பின்னர், பட்டினப்பாக்கம் இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுப்பணித் துறை, வருவாய், நகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இதில் புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பட்டினப்பாக்கம் இறுதி செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனடிப்படையில், பட்டினப்பாக்கம் நல்ல தெரிவு அல்ல என்று அன்புமணி அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.