அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்

அரபிக்கடலில் ரூ.3,000 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்

அரபிக்கடலில் ஈரானியப் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்தியக் கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன் இணைந்து, இந்தியக் கடலோரக் காவல்படையினர் கடந்த 25-ம் தேதி அரபிக்கடலில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் கடல் மற்றும் வான்வழிக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், சந்தேகத்திற்கிடமான ஈரானியப் படகு அடையாளம் காணப்பட்டு, லட்சத்தீவுகளின் மேற்குப் பகுதியில் பின்தொடர்ந்து கைப்பற்றப்பட்டது.

அந்தப் படகில் இருந்து ரூ.3,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 526 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், படகை இயக்கிய பாகிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோர் தொடர் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடல்வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கப் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடல்சார் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடலோரக் காவல்படை தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.