வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டெல்லியில் இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த போயிங் 787-9 ரக விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லி விமானம் நிலையம் நோக்கி வந்த AI2030 என்ற ஏர் இந்தியா விமானம், மும்பை வான் பரப்பில் இன்று காலை பறந்துகொண்டிருந்த போது, கடத்தல் முயற்சிக்கான ’ஸ்க்வாக் 7500’ என்ற சர்வதேச குறியீட்டை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தின் விமானி அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அந்த விமானத்தை அவசர தரையிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஜெய்ப்பூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு, காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உள்ளிட்டோர் விமானத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள், அவர்களின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், விமானத்தில் உள்ள பயணிகள் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்குவாக் 7500 என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விமானப் போக்குவரத்து டிரான்ஸ்பாண்டர் குறியீடாகும். விமானக் கடத்தல் அல்லது சட்டவிரோதமாக யாரேனும் விமானத்தைக் கைப்பற்ற நினைத்தால் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசியமாகத் தெரிவிக்க விமானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல் உதவி ஆணையர் ஷிவ் தயாள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “விமானம் மும்பை விமானத் தகவல் மண்டலத்தில் இருந்தபோது, சட்டவிரோத தலையீட்டைக் குறிக்கும் ‘Squawk Code 7500’ என்ற குறியீட்டை விமானி பயன்படுத்தியதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்தே விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்புப் படையினர் விமானத்தைச் சோதித்து வருகின்றனர்.
விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையை உடனடியாக அறிய முடியவில்லை. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஏர் இந்தியா விமான கடத்தலுக்கான முயற்சியா? இது என்றும் விசாரிக்கப்பட உள்ளது.
