போர் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துகிறது: ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ என ஈரான் அதிபர் கவலை

போர் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துகிறது: ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ என ஈரான் அதிபர் கவலை

போர் காரணமாகக் காடுகள், நீர்நிலைகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன், மண் மற்றும் நீர்வளங்களும் மாசடைவதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் கவலை தெரிவித்துள்ளார். இத்தகைய பாதிப்புகளை ‘சுற்றுச்சூழல் இனப்படுகொலை’ எனக் குறிப்பிட்ட அவர், ஆயுத மோதல்களின்போது பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்மீனியா தலைநகர் யெரெவானில் நேற்று நடைபெற்ற பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையின் 17-வது மாநாட்டின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர், போர்கள் மனித உயிர்களைப் பறிப்பதுடன், பொருளாதாரக் கட்டமைப்புகளையும் அழிக்கின்றன. காடுகள் தீக்கிரையாவது, சதுப்பு நிலங்கள் சேதமடைவது, மண் மற்றும் நீர்வளங்கள் மாசடைவது போன்ற பாதிப்புகள் போர் முடிந்த பின்னரும் பல ஆண்டுகள் அல்லது தலைமுறைகள் வரை நீடிக்கக்கூடும் என்றார்.

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொழிற்சாலைகள், எரிசக்தி நிலையங்கள் சேதமடைந்து, தீ விபத்துகள் மற்றும் மாசுபடுத்தும் பொருள்களின் வெளியேற்றத்தால் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காசா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் அழிவைக் கண்டிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டும் முடங்கிவிடுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

போரின்போது இயற்கை தற்காத்துக்கொள்ள முடியாத பலியாகக் கருதப்படுவதை சர்வதேச சமூகம் அனுமதிக்கக் கூடாது என்ற அவர், சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பிடுதல், சேதமடைந்த இயற்கைச் சூழலை மீட்டெடுத்தல், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளைச் சர்வதேச அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும் என்றார். பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்படும் நாடுகள், சுற்றுச்சூழல் சேதத்திற்கான செலவுகளைத் தனியாக ஏற்க வேண்டிய நிலை உருவாகக் கூடாது என்றும், போதிய நிதியுதவியும் தொழில்நுட்பப் பரிமாற்றமும் இல்லாவிட்டால் உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்க இலக்குகள் வெறும் அறிவிப்புகளாகவே இருக்கும் என்றும் எச்சரித்தார்.

ஈரானில் ஹிர்கானியன், அரஸ்பரான் காடுகள், ஜாக்ரோஸ் மலைத்தொடர், பாலைவனங்கள், பாரசீக வளைகுடா, ஓமன் கடல், காஸ்பியன் கடற்கரைப் பகுதிகள் எனப் பல்வேறு இயற்கைச் சூழல்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இயற்கையைப் பாதுகாப்பது ஈரானின் கலாசாரம் மற்றும் நாகரிக மரபின் ஓர் அங்கம் என்றார். மேலும், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு கருத்து வேறுபாடுகளைக் குறைத்து, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்கும் உதவும் எனத் தெரிவித்தார்.