டெல்லியில்தடையைமீறிப்போராட்டம்:சிஜேபிநிறுவனர்அபிஜீத்தீப்கே, நேஹாபோரா கைது

டெல்லியில்தடையைமீறிப்போராட்டம்:சிஜேபிநிறுவனர்அபிஜீத்தீப்கே, நேஹாபோரா கைது

டெல்லியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, நேஹா போரா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர்களிலும் போராட்டங்கள் வலுத்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தக் கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வியாழக்கிழமை (அக். 15) திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அஜிங்கியா ஷிண்டே பிணைப் பத்திரத்தில் கையொப்பமிட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் நேற்று போராட்டம் நடத்தவுள்ளதாக, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, டெல்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு நேரில் சென்ற பெண் காவலர்கள் உள்பட 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், அனுமதி அளிக்காததால் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று நோட்டீஸ் வழங்கினர்.

இந்த நிலையில், போராட்டத்திற்கு செல்லக் கூடாது என அபிஜீத் தீப்கேவிற்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் போராட்டத்திற்கு செல்ல முயன்றார்.

கன்னாட் பிளேஸில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 அமலில் உள்ளதால் அபிஜீத் தீப்கேவுக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி கன்னாட் பிளேஸில் போராட்டம் நடத்த புறப்பட்ட அபிஜீத் தீப்கேவை காவல் துறையினர் கைது செய்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வை திரும்பப் பெற வேண்டும் மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணையர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா போராட்டத்தில் ஈடுபட்டார். அபிஜீத் தீப்கே மற்றும் நேஹா போரா இருவரையும் டெல்லி காவல் துறையினரால் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

சிஜேபி போராட்டத்தில், போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பி வரும் ஜந்தர் மந்தர் நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.